Wednesday 10 December 2014

'கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன்' - கதையுடன் விளக்கம்!

தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற பழமொழி இது. இப் பழமொழியின் தாக்கம் பெண்களிடையே மிகுதி என்றால் அது மிகையாகாது. இந்தப் பழமொழியின் தவறான பொருள் விளக்கத்தால் நேர்ந்த விளைவுதான் இது. இந்தத் தவறுக்குக் காரணம் ஒரே ஒரு எழுத்துப் பிழைதான். அந்தப் பிழை என்ன என்று அறிந்து கொள்ளும் முன்னர் இப்பழமொழிக்கு தற்போது கூறப்படும் பொருள் என்ன என்று காண்போம்.


'கல்நெஞ்சன் (முரடன்) ஆக இருந்தாலும் அவன் உன் கணவனே; புல்நெஞ்சன் (கெட்டவன்) ஆக இருந்தாலும் அவன் உன் புருசனே'




ஆண்-பெண் இணைந்து வாழ்க்கை நடத்தும் இல்லறத்தில் மணமான ஒரு பெண் தனது கணவனை எந்தெந்த வகைகளில் எல்லாம் அனுசரித்துப் போக வேண்டும் என்று அப்பெண்ணுக்கு அறிவுரை கூறுவதாக இந்தப் பழமொழியின் பொருள் உள்ளது. இதனால் இல்லறத்தில் இருந்து ஆணும் பெண்ணும் பிரிந்து செல்லாமல் ஒன்றாக வாழும் ஒரு நன்மை உண்டெனினும் தீமைகளே அதிகமாக விளைகின்றன. இல்லறத்தில் ஆணின் கையே எப்போதும் ஓங்கி இருக்கவும் பெண்ணின் கை எப்போதும் தாழ்ந்து இருக்கவுமாக ஒரு தவறான சமுதாய வழிநடத்தலுக்கு இக்கருத்து வழிவகுத்து விட்டது. இதனால் பாதிப்படைந்த குடும்பங்கள் மிகப் பல. இவ்வளவு கீழான பொருளில் ஒரு பழமொழி ஏன் நடைமுறையில் இருக்க வேண்டும்?. இது தவறான வழிநடத்தலுக்கு வழிவகுக்கும் என்று அறிந்தும் இதை இப்பொருளில் உலவ விட்டது யாருடைய குற்றம்?. விடைதெரியாத கேள்விகள் இவை.


ஒரு காட்டை எரித்துச் சாம்பலாக்குவதற்கு ஒரு சின்னத் தீப்பொறி போதுமானதைப் போல ஒரே ஒரு எழுத்துப் பிழை போதுமே ஒரு சமுதாயத்தையே மாற்றி அமைப்பதற்கு. அவ்வாறே இந்தப் பழமொழியில் ஒரே ஒரு எழுத்து தவறாக எழுதப்பட்டதன் விளைவு இதில் உள்ள சொற்களுக்குத் தவறான பொருட்களைக் கொள்ளச் செய்து பழமொழியின் நோக்கத்தையே சிதைத்து விட்டது. உண்மையில் இந்தப் பழமொழியினைக் கூறியவர் ஒரு சித்தராகத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சித்தர்கள் மட்டுமே எந்தப் பொருளையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவர். நாம் ஒரு பொருளைக் குறிக்க ஒரு சொல்லைப் பயன்படுத்தினால் அவர்கள் அதே சொல்லை வேறு பொருளைக் குறிக்க பயன்படுத்துவர். இந்தப் பொருள் வேறுபாடுகளைக் காணும் முன்னர் ஒரு சிறுகதையினைப் பார்ப்போம்.


ஒரு ஊரில் ஒரு கொக்கு இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட பாறாங்கல்லின் மேல் அமர்ந்து இளைப்பாறிய பின் மலம் கழித்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இவ்வாறு நாள்தோறும் தன்னை அசிங்கப் படுத்துவதைப் பொறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்த கல் ஒருநாள் பொறுமை இழந்து கொக்கிடம் கேட்டது 'ஏன் நாள்தோறும் என்மேல் வந்து அமர்ந்து என்னை அசிங்கப் படுத்துகிறாய்?. நான் உனக்கென்ன கெடுதல் செய்தேன்?. சிவனே என்று நான் ஒரு ஓரமாகத்தானே இருக்கிறேன். நீ வேண்டும் என்றே என்னைத் தேடிவந்து என் மேல் அமர்ந்து இளைப்பாறுவதுடன் அசிங்கம் வேறு செய்துவிட்டுப் போகிறாயே? இது ஏன்? உனக்கு இவ்வாறு நடந்து கொள்வதில் குற்ற உணர்ச்சி தோன்றவில்லையா?'. அதற்கு கொக்கு இறுமாப்புடன் பதில் சொன்னது 'நீ இயக்கம் இல்லாமல் ஒரே இடத்தில் கிடக்கிறாய். உன்னால் ஒரு பயனும் இல்லை. நான் அங்கிங்கென தன்னிச்சையாய் பறந்து திரிபவன். உன்னை விட உயர்ந்தவன் என்பதால் இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்' அதைக் கேட்ட கல் கடகட என்று சிரித்தது.


பின்னர் சொன்னது 'அட முட்டாள் கொக்கே! நான் இயக்கமே இல்லாமல் கிடந்தாலும் இறைவனது திருமேனி ஆகும் தகுதி பெற்றவன். எப்போதுமே பறந்து கொண்டிருந்தாலும் உனக்கு அந்தத் தகுதி இல்லை. நீ எத்துணை முறை என்னை மாசுபடுத்தினாலும் மழைநீரால் கழுவப்பட்டு மீண்டும் பொலிவுடன் நிற்பவன் நான். அகத்திலும் புறத்திலும் எப்போதும் அழுக்குகளைச் சுமந்துகொண்டு திரிபவன் நீ. எனவே நான்தான் சிவம் ஆகிய இறைவன். நீ அந்த சிவத்திற்குக் கட்டுண்ட ஆன்மா என்பதை மறவாதே. நீ இயங்கிக் கொண்டிருக்கும் வரையில் தான் ஆன்மா. உன் இயக்கம் நின்று விட்டால் என்னைப் போல சிவம் ஆகி விடுவாய். இந்த உண்மையைப் புரிந்துகொண்டால் என்னை ஏளனம் செய்யமாட்டாய்' கல் சொன்ன பதிலைக் கேட்டு மெய் உணர்வு பெற்ற கொக்கு கல்லை வணங்கி விட்டு சென்றது.


இந்தக் கதை உணர்த்தும் கருத்து என்ன?. இயங்காமல் இருந்தாலும் கல்தான் இறைவன் ஆகிய தலைவன்; இயங்கிக் கொண்டே இருந்தாலும் பறவை ஒரு ஆன்மாவே ஆகும். ஆன்மா அடிக்கடி சிவத்தில் தங்கி இளைப்பாறிவிட்டுச் செல்வதுடன் என்றும் சிவத்திற்கு கட்டுப்பட்டது என்னும் உயரிய ஆன்மீகக் கருத்தை உணர்த்துவதற்காக உருவாக்கப் பட்டதுதான் இந்தப் பழமொழி. இனி சரியான பழமொழி இது தான்.




'கல் ஆனாலும் கணவன்; புள் ஆனாலும் புருசன்.'
(கணவன் = இறைவன்; தலைவன்; புள் = பறவை; புருசன் = ஆன்மா)

No comments:

Post a Comment