Tuesday 25 June 2019

3ஆம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போடும் இந்தியா? இது தேவைதானா?

"முதலில் தெருவுக்கு தெரு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள், மக்களின் வாழ்வாதாரங்களை உறுதி செய்யுங்கள். பின்னர் நிலவில் தண்ணீர் இருக்கிறதா? செவ்வாய் கிரகத்தில் வாழ முடியுமா? என்பதை அறிந்துகொள்ள கோடிகோடியாய் செலவு செய்யலாம்".

விண்வெளி போர் பயிற்சி

- இது தான் தற்போதைய தமிழ்நாட்டின் குரலாக இருக்கும் நிலைப்பாட்டில், நமது ஆதங்கத்தை மென்மேலும் கிளப்பிவிடும் படியான ஒரு அறிவிப்பை இந்திய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக இந்தியா தான் உருவகப்படுத்தப்பட்ட ஒரு விண்வெளி போர் பயிற்சியை நடத்த உள்ளது - இது தான் "கடுப்பை கிளப்பும்" அந்த அறிவிப்பு.

பலத்தை பறைசாற்ற உதவும் சூட்சமமா?

என்னது விண்வெளி போர் பயிற்சியா? அப்படி என்றால் என்ன? இது பாதுகாப்பு சார்ந்த பயிற்சியா அல்லது இந்தியாவின் பலத்தை பிற நாடுகளுக்கு பறைசாற்ற உதவும் சூட்சமமா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை அலசுவோம் வாருங்கள்!

எப்போது நிகழ்த்த திட்டமிடப்பட்டு உள்ளது?

கூறப்படும் "உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி போர் பயிற்சி" ஆனது வருகிற ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் நிகழ்த்த திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த உருவகப்படுத்தப்பட்ட விண்வெளி போர் பயிற்சிக்கு இண்டஸ்பேஸ்எக்ஸ் (IndSpaceEx) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி ஆனது அடிப்படையிலேயே ஒரு ‘டேபிள்-டாப் வார்-கேமாக' இருக்கும் மற்றும் இதில் இராணுவம் மற்றும் விஞ்ஞான சமூகத்தைச் சேர்ந்த அனைத்து பங்குதாரர்களும் பங்கேற்கிறார்கள்.

இந்த பயிற்சியின் நோக்க என்ன?

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் களங்களில் விண்வெளி தாக்குதல்களும் உள்ளன. ஆக இம்மாதிரியான விண்வெளி போரில் ஏற்படக்கூடிய சவால்களைப் புரிந்துகொள்வதும், இந்த குறிப்பிட்ட களத்தில் மாபெரும் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் சீனாவின் செல்வாக்கை எதிர்ப்பதும் தான் இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதுவொன்றும் இந்தியாவின் முதல் படி அல்ல!

கடந்த மார்ச் 27, 2019 அன்று தான் இந்தியா அதன் முதல் விண்வெளியில் செயல்படும் திறன் கொண்ட ஆயுத பரிசோதனையை ''மிஷன் சக்தி" ஏற்கிற பெயரின் கீழ் வெற்றிகரமாக நிகழ்த்தியது. சுமார் 283 கிமீ உயரத்தில் உள்ள 740 கிலோகிராம் எடை கொண்ட ஒரு மைக்ரோசாட்-ஆர் செயற்கைக்கோளை 'ஹிட் அன்ட் கில்' கட்டளையின் கீழ் (அதாவது மோதி - அழிக்கும் கட்டளை) கிளம்பிய ஒரு 19 டன் இடைமறிப்பு ஏவுகணை தான் மிஷன் சக்தி. இது தான் இந்தியாவின் நம்பகமான எதிர்-விண்வெளி திறனை வளர்ப்பதற்கான முதல் படி ஆகும்.

பயிற்சியின் உள்நோக்கம் என்ன?

முன்னரே கூறியபடி, இந்தியாவின் இந்த விண்வெளி போர் பயிற்சியின் பிரதான நோக்க சீனா தான். ஆம், விண்வெளி யுத்தம் என்கிற துறையின் கீழ், சீனா அபார வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பு நலனுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு களமாக நம்பப்படுகிறது.

ஆகையால் இந்த குறிபிட்ட களத்தில் ஏற்படக்கூடிய சவால்களைப் புரிந்துகொள்ளவும், இந்தியாவும் இத்துறையில் வளர்ச்சியை நோக்கி தான் செல்கிறது என்று சீனாவிற்கு புரியவைக்கவுமே இந்த பயிற்சி நடக்கிறது என்பது வெளிப்படை.

சீனாவின் வளர்ச்சியை இந்தியாவால் எட்ட முடியுமா?

இந்தியா அதன் ஏ-சாட்டை சோதித்த அதே வேளையில், சீனாவோ, ​​இயக்கவியல் மற்றும் இயக்கமற்ற (ஒளிக்கதிர்கள், மின்காந்த துடிப்பு) விண்வெளி ஆயுதங்களின் அடிப்படையை அதன் இராணுவ திறன்களில் சேர்க்க தொடங்கி இருந்தது. இந்த இடத்தில் சீனாவின் முன்னேறிய நிலைப்பாட்டை நன்கு அறியமுடிகிறது. இருந்தாலும் கூட, சீனா போன்ற நாடுகளிடமிருந்து விண்வெளி சொத்துக்களுக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டிய அவசியத்தையும், இந்தியாவின் தீவிரத்தையும் இண்டஸ்பேஸ்எக்ஸ் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

முழு வீச்சிலான ஒரு ஸ்பேஸ் கமெண்ட்டாக வளரும்!

மிஷன் சக்தியின் வெற்றியை தொடர்ந்து, இந்தியாவில் ஒரு புதிய பாதுகாப்பு விண்வெளி ஏஜென்சி வடிவமைக்கபெறத் தொடங்கியது. டிபேன்ஸ் இமேஜரி ப்ராசஸிங் அன்ட் அனலிடிக்ஸ் சென்டர் (டெல்லி) மற்றும் டிபேன்ஸ் சாட்டிலைட் கண்ட்ரோல் சென்டர் (போபால்) ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து, அதற்கு இரண்டு நட்சத்திர ஐ.ஏ.எஃப் ஜெனரல் ஒருவரை தலைவராக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனம் வருகிற சில ஆண்டுகளுக்குள் முழு வீச்சிலான ஒரு ஸ்பேஸ் கமெண்ட்டாக வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மிஷன் சக்தி பற்றிய இதர விவரங்கள்!

மிஷன் சக்தி என்பது இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ மற்றும் இஸ்ரோ தலைமையிலான செயற்கைக்கோள் எதிர்ப்பு (ஏ-சாட்) ஆயுதத் திட்டமாகும். மிஷன் சக்தியின் முழு செயல்பாடும் மூன்று நிமிடங்கள் மட்டுமே இருந்தது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் ஏற்கனவே ஏ-சாட் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளன. மிஷன் சக்தியின் வெற்றியை தொடர்ந்து அந்த பட்டியலில் இந்தியா, நான்காவது நாடாக இணைந்து உள்ளது. ஒடிசாவில் உள்ள டிஆர்டிஓவின் சோதனை வரம்பிலிருந்து மிஷன் சக்தி மேற்கொள்ளப்பட்டது. விண்வெளி சொத்துக்களைப் பாதுகாக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறதா என்பதை சரிபார்க்கவே இந்த சோதனை செய்யப்பட்டது என்பது வெளிப்படை.

No comments:

Post a Comment