Monday 31 December 2018

ஹோட்டல்ல கை கழுவ தர ஃபிங்கர்பௌல் எப்படி வந்துச்சுங்கிற சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

"உணவு விடுதிக்கு சாப்பிட சென்றிருந்தார் நம்ம ஆளு ஒருத்தர். உட்கார்ந்ததும், நீருடன் எலுமிச்சை பழத்துண்டும் இருக்கும் கிண்ணத்தை கொண்டு வந்து வைத்தார் சர்வர்.

எலுமிச்சையை கிண்ணத்தில் உள்ள தண்ணீரில் பிழிந்து அப்படியே குடித்து விட்டார் நம்ம ஆளு" - இப்படி ஒரு கதையை எப்போதாவது ஒரு முறையாவது, யாராவது ஒரு நண்பர் சொல்ல கேட்டு, வயிறு வலிக்க சிரித்திருப்பீர்கள்.

ஃபிங்கர் பௌல்

இன்று பெருநகரங்களில் மட்டுமல்ல, சாதாரண பட்டணங்களில் கூட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த, வெவ்வேறு பண்பாட்டு பின்னணியை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களில் பலருக்கு இதுபோன்ற பழக்க வழக்கங்கள் அந்நியமாக தோன்றும். மேற்கத்திய உணவு மேஜை கலாசாரத்தில் ஃபிங்கர் பௌல் என்னும் இந்த விரல்களை கழுவும் கிண்ணம் வைக்கும் முறை பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கக்கூட மாட்டார்கள். அதைப் பற்றி ஏதோ அறிந்திருக்கும் சிலருக்குக்கூட அதன் பின்னே இருக்கக்கூடிய சில உண்மைகள் தெரியாமலிருக்கலாம். இதோ, ஃபிங்கர் பௌல் குறித்த சில சுவாரசியமான கருத்துகள்

எதற்காக?

ஃபிங்கர் பௌலில் எலுமிச்சை துண்டு வைக்கப்பட வேண்டுமென்பது கட்டாயமல்ல; அது தொடரும் பழக்கம் மட்டுமே! எலுமிச்சை, நல்ல கிருமி நாசினி. கண்களுக்கு தெரியாத நுண்கிருமிகளை கைகளிலிருந்து அகற்றக்கூடியது. எலுமிச்சையில் உள்ள அமிலத்தன்மை, கைகளில் உள்ள எண்ணெய் பிசுக்கையும் போக்கும்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

கிண்ணத்தில் உள்ள எலுமிச்சை துண்டினை தொடவோ, பிழியவோ அல்லது தின்னவோ கூடாது. சில உயர்தர உணவகங்களில் நறுமணம் வீசும் அழகிய மலர் ஒன்றும் கிண்ணத்தில் வைக்கப்படுகிறது. சாலட் சாப்பிடுவதற்கான முள் கரண்டிகள், வகை வகையான உணவுகள் கொண்ட ஃப்ரெஞ்சு மெனு போன்றே இந்த ஃபிங்கர் பௌலும் சராசரி மக்களுக்கு விநோதமாகவே தெரிகிறது.

ஆறு சுற்று பரிமாறப்படும் உணவுகளில் பழங்களுக்கான சுற்றுக்குப் பிறகு, பழச்சாற்றினால் கைக்குட்டைகள் கறையாகிவிடாமல் தவிர்ப்பதற்காகவே முந்தைய காலங்களில் ஃபிங்கர் பௌல் வைக்கப்பட்டது. தற்போதைய காலத்தில் உணவுகளின் கடைசி சுற்றாகிய டெசர்ட் என்னும் இனிப்புகளோடு சேர்த்து இது பரிமாறப்படுகிறது. உணவு மேஜை நாகரிகத்தின்படி, விரல்களின் நுனியை மட்டுமே கிண்ணத்தின் நீரில் நனைக்க வேண்டும்.

எப்போது தோன்றியது?

முதல் உலகப்போரின் போது அமெரிக்காவின் உணவு நிர்வாக துறை, சீன எலும்பு சாம்பல், வெள்ளி மற்றும் கண்ணாடியால் செய்யப்பட்ட கலன்களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதன் பேரில் அமெரிக்காவில் ஃபிங்கர் பௌல் பயன்படுத்தும் பழக்கம் முடிவுக்கு வந்தது.

போரின் போது இவற்றின் பயன்பாடு முடிவுக்கு வருவதற்கு முன்பு, ஃபிங்கர் பௌலும் மெல்லிசையுமே உயர்தர உணவகங்களின் அடையாளமாக இருந்தன.

நறுமணத் துண்டுகள்

நவீன, குறிப்பாக ஜப்பானிய உணவகங்களில் நீராவியால் சுத்திகரிக்கப்பட்ட, நறுமணம் ஏற்றப்பட்ட துண்டுகள் கைகளை துடைப்பதற்காக ஃபிங்கர் பௌல்களுக்கு பதிலாக கொடுக்கப்படுகிறது.

மறக்கப்பட்ட உணவு மேஜை கலாசாரமான ஃபிங்கர் பௌல், எண்ணெய் மற்றும் நறுமண பொருட்கள் அதிகம் கலந்த உணவுப் பழக்கம் கொண்ட, சாப்பிடுவதற்கு கைகளை பயன்படுத்தும் இந்திய மக்களுக்கு இன்று வேறு விதமாகப் பயன்படுகிறது. இதுவும் இன்றைக்கும் அவசியமான ஒன்றாகத்தான் தெரிகிறது.

No comments:

Post a Comment