Monday, 1 July 2019

ஏடிஎம்-ல் பணம் எடுக்க வரி? - மத்திய அரசு ஆலோசனை

டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ஏடிஎம்-ல் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கும் அதிகமான ரொக்கத்தொகை பரிவர்த்தனை செய்பவர்களுக்கு வரி விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

இணையவழியில் மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக சமீபத்தில் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் ஆகிய ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது.

இந்நிலையில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் இருந்தோ, ஏடிஎம் மூலமாகவோ எடுப்பவர்களுக்கு வரி விதிப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கறுப்புப்பண புழக்கத்தைத் தடுக்கவே இந்தப் புதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த Bank Transaction Tax என்கிற வங்கிப் பரிவர்த்தனை வரித்திட்டம், பெரும் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மீண்டும் அதை அமல்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அத்துடன், பெருந்தொகை பரிவர்த்தனைகளை ஆதாருடன் இணைக்கவும் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. அதன்மூலம் தனிநபர்களையும், நிறுவனங்களையும் கண்காணிப்பது எளிது என மத்திய அரசு கருதுகிறது. ஆதார் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பானதாக மாற்ற, சம்பந்தப்பட்டவரின் மொபைல் போனுக்கு OTP பாஸ்வேர்டை அனுப்பவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலே சொல்லப்பட்ட அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment