Friday 5 July 2019

பிசிராந்தையார் பாடல்பாடி விளக்கம் கேட்ட நிர்மலா சீதாராமன்.. சிரித்த தமிழக எம்பிக்கள்.. கைதட்டிய மோடி

வருமான வரியை ஒழுங்காக கட்டும் பொறுப்புள்ள குடிமகன்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய மத்திய நிதியமைச்ர் நிர்மலா சீதாராமன், வரி வசூலிப்பது தொடர்பாக தமிழ் இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு நூலில் வந்துள்ளவற்றை மேற்கோள் காட்டி பேசினார்.

மதுரையை ஆண்ட பாண்டியன் அறிவுடை நம்பி தன் குடிமக்களைத் துன்புறுத்தி அவர்களிடம் வரி வாங்கினான். அவனிடம் சென்று அவன் தவறுகளை எடுத்துரைத்து அவனைத் திருத்த யாரும் முன்வரவில்லை.

அந்நிலையில், அறிவுடை நம்பியிடம் சென்று அவனுக்கு அறிவுரை வழங்குமாறு அந்நாட்டு மக்கள் பிசிராந்தையாரை வேண்டினர். அவரும் குடிமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, அறிவுடை நம்பியிடம் சென்று ஒருஅரசன் எவ்வாறு வரியைத் திரட்ட வேண்டும் என்று அறிவுரை கூறும் வகையில் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் அமைந்துள்ளது .

உலகமும் கெடுமே

அந்த பாடலில் உள்ள சில வரிகளைத்தான் இன்று மேற்கொள் காட்டி யானை புகுந்த புலம் என்ற தலைப்பினை கூறி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

"காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;

நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே

வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;

5 அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே

கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு

பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்

10 யானை புக்க புலம்போலத்

தானும் உண்ணான் உலகமும் கெடுமே" என்று கூறினார்.

சிரித்த தமிழ் எம்பிக்கள்

அப்போது அர்த்தம் தெரியுமா என்ற தொனியில் தமிழ் எம்பிக்களை பார்த்து இரண்டு முறை கேட்டார். அப்போது அவர்கள் சிரித்தனர். தொடர்ந்து விளக்கம் அளித்த அவர், "விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுகூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

யானை புகுந்த நிலம்

அறிவுடைய அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும்" என்பதை விளக்கமாக ஆங்கிலத்தில் எடுத்துக்கூறினார்.

அவையில் சிரிப்பலை

இதை கேட்ட உடனேயே பிரதமர் மோடி உள்பட அனைவரும் கைதட்டிசிரித்து ஆரவாரம் செய்தனர். இதனால் அவை சிரிது நேரம் சிரிப்பலையாக காணப்பட்டது. அதன்பின்னர் கூறிய நிர்மலா சீதாராமன், பாண்டியன் அறிவுடை நம்பிக்கு பிசிராந்தையர் கூறிய அந்த அற்புதமான அறிவுரையை இந்த அரசும் கேட்டு நடக்கிறது. யானை புகுந்த விளை நிலம் போல் வரி இருக்காது என்றார். கடந்த சில ஆண்டுகளில் நேரடி வரி கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிசிராந்தையார் - தடுமாறிய நிர்மலா சீதாராமன்

பதற்கு முன்னர் பிசிராந்தையார் என்பதை நிர்மலா சீதாராமனால் சரியாக உச்சரிக்க இயலவில்லை. பிசிர் ஆந்தையார் என பிரித்து உச்சரித்தார். பின்னர் திமுக எம்.பி.க்கள் திருத்தமாக பிசிராந்தையார் என உச்சரித்தனர். இதை ஏற்றுக் கொண்ட நிர்மலா சீதாராமன் 2 முறை பிசிராந்தையார், பிசிராந்தையார் என உச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment