Monday 13 August 2018

சீனாவில் தயாராகும் இந்திய ரூபாய் நோட்டுகள் - சீன நாளிதழ் பகீர் தகவல்

இந்திய ரூபாய் நோட்டுகள் சீனாவில் அச்சடிக்கப்பட உள்ளதாக சீன நாளிதழ் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளின் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் சந்தையை மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. பொதுவாக, பல நாடுகள் தங்களது கரன்சி தேவை அதிகரிக்கும் பட்சத்தில் அவற்றை மேற்கத்திய நிறுவனங்கள் மூலமாக பூர்த்தி செய்து கொள்ளும்.

இந்நிலையில் சீனா, கரன்சி நோட்டுகள் அச்சடிக்கும் சந்தையில் கால்பதிப்பதன் மூலம் சர்வதேச அளவில் தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதுகிறது. இந்த அடிப்படையில், சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் பணிகளை சீனா தொடங்கியுள்ளதாக அங்கு வெளியாகும் ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’  என்னும் ஆங்கில நாளிதழில் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விஷயத்தை பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று சில நாடுகள் கோரியுள்ளதாகவும், அவ்வாறு வெளிப்படுத்தினால் தங்களது நாட்டில் தேவையற்ற விவாதங்கள் எழும் என்றும் அந்நாடுகள் தெரிவித்துள்ளதாகவும் அந்த நாளிதழில் கூறப்பட்டுள்ளது.

இந்த செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக, சீன ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு மற்றும் நாணய உற்பத்தி நிறுவனத்தின் இயக்குநர் லீ கீஷெங் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளை சீனா அச்சடித்ததில்லை. ஆனால், இந்த நிலைப்பாட்டில் 2013-ம் ஆண்டு மாற்றம் ஏற்பட்டது.

தற்போது தாய்லாந்து, வங்கதேசம், இலங்கை, மலேசியா, இந்தியா, பிரேசில் போலந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுகளை பெரிய அளவில் அச்சடிப்பது தொடர்பான ஒப்பந்தங்களை சீனா பெற்றுள்ளது என்றார் அவர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்தப் பிரச்னையின் தொடர்ச்சியாக பாகிஸ்தான் கள்ளநோட்டு தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கும். இதனால், உள்நாட்டுப் பாதுகாப்பில் குழப்பமான நிலை ஏற்படக்கூடும் என்றார் அவர்.

No comments:

Post a Comment