Thursday 3 January 2019

இந்த 5 கேள்விக்கு உங்ககிட்ட பதில் இருக்கா?

என்னைக்காவது பஸ்ல ட்ராவல் பண்ணும் போது, வயசானவர், கர்ப்பிணி, உடம்புக்கு முடியாதவங்களுக்கு எந்த ஒரு யோசனையும் இல்லாம, டக்குன்னு பார்த்ததுமே எழுந்து இடம் கொடுத்திருக்கமா...? கொடுத்திருப்போம்... ஒருசிலர், ஒருசில தடவ, சராசரி சதவிதம் என்னனு உங்களுக்கு தெரியும்?

பெட்டிக் கடையில, அண்ணாச்சிக் கடையில சில்ர பாக்கி சரியா வராட்டி கேட்டு வாங்குற நாம... தவறுதலா, அதிகமா கொடுத்த சில்ர பாக்கிய திருப்பிக் கொடுத்திருக்கமா?

மத்தவனுக்கு எப்ப வந்தா என்ன... எனக்கு உடனே நடக்கணும்னு கார்பரேஷன் ஆபீஸல ஒருத்தன பிடிச்சு ஐநூறு, ஆயிரம் லஞ்சம் கொடுத்து நமக்கான காரியத்த நடத்திக்குறோம்... நமக்கு தகுதியே இல்லான்னாலும், முந்தியடிச்சு அரசு சலுகைகள வாங்கிக்கிறோம்...

ஐம்பதாயிரம், எண்பதாயிரம் சம்பாதிச்சாலும் எப்படியாவது ஐ.டி ஃபைல் பண்ணும் போது, கூடுதலான வாடகை, போலி ரெண்டல் அக்ரிமெண்ட், போலியான மெடிகல் பில்ஸ் எல்லாம் செட்டில் பண்ணி, ஏதோ ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்கிட்ட மாதிரி பெருமிதமா சந்தோசப்படுறோம்...

நாம இந்த கவர்மெண்ட்டுக்கு என்னத்த சரியாப் பண்ணிக் கிழிச்சுட்டோம்னு இந்த கவர்மெண்ட்ட திட்டித் தீர்க்குறோம்...? (இவங்க தப்பு பண்றாங்க தான், ஆனா...அத அளவு தப்பு நாமளும் தானே பண்றோம்)

கேள்வி #1

நாட்டுக்கு நல்ல குடிமகனா இல்லாமா, நாடு மட்டும் நமக்கு நல்லது பண்ணனும்னா எப்படி...? இந்த நாடு நாளைக்கு எழுந்து வேலைக்கு போய் நமக்கு வந்து சம்பாச்சு கொட்டுமா... ? நாம நிறையா இடத்துல அது என்ன நமக்கு பண்ணுச்சு, இது என்ன நமக்கு பண்ணுச்சு கேள்வி கேட்டுட்டே இருக்கமே தவிர, நாம எல்லாத்துக்கும் என்ன பண்ணிக் கிழிச்சோம்னு யோசிக்க மறந்திடுறோம்...

இதத்தான் எம்.ஜி.ஆர் நடிச்ச "நான் ஏன் பிறந்தேன்" படத்துல கவிஞர் வாலி ஒரு பாட்டுல

"நாடென்ன செய்தது ந‌ம‌க்கு

என கேள்விகள் கேட்பது எதற்கு

நீயென்ன செய்தாய் அதற்கு

என நினைத்தால் நன்மை உனக்கு.." ன்னு எழுதி இருந்தார்.

நாம இன்னுமே நம்மையும், இந்த சமூகத்தையும் பிரிச்சு பார்த்துட்டே இருக்கோம்... இந்த சமூகம் வேற, நான் வேறங்கிற சிந்தனை எப்போ மாறுதோ அப்ப தான் நிஜமான மாற்றம் பிறக்கும்.

கேள்வி #2

இங்க நடக்குற பெரிய தப்பு என்ன தெரியுமா... நாம பண்ற தப்ப... இன்னொரு பெரிய தப்புக் கூட கம்பேர் பண்ணி... நம்ம தப்பு சின்னது.... அவன் பண்ற தப்பு தான் பெருசு... அதனால, இதெல்லாம் பெருசா எடுத்துக்க தேவை இல்லன்னு.... திரும்ப, திரும்ப, திரும்ப... நம்ம தப்ப நியாயப்படுத்தி நாம செஞ்சுக்கிட்டே இருக்கோம்.

இதே மாதிரி, அந்தந்த நிலையில இருக்கவங்க... தங்களுக்கு அடுத்த நிலையில இருக்க திருட்டு / திருடனுங்க கூட கம்பேர் பண்ணி நியாயப்படுத்திட்டே இருக்காங்க. "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது...", "தப்புல என்ன சின்னது, பெருசு... எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான்"னு அந்நியன்ல சொன்ன மாதிரி... முதல்ல சின்னது, பெருசுன்னு ஒப்பீடு பண்ணாம... நாம பண்ற தப்ப முதல்ல நிறுத்தனும்.

கேள்வி #3

கள்ள ஓட்டுப் போடுறாங்க, கள்ள ஓட்டுப் போடுறாங்கன்னு திட்டிட்டே இருக்கோம்.. முதல்ல அவனுக்கு எப்படி கள்ளவோட்டு போடுற ஐடியா வந்துச்சு.. கள்ளவோட்டு போடலாம்னு அவனுக்கு ஒரு வழிய ஏற்படுத்திக் கொடுத்ததே நாம தானே... இத்தன பேர் ஓட்டே போடவரது இல்லன்னு தெரிஞ்சுட்டு தான் அவன் கள்ளவோட்டு போட ஆரம்பிச்சான். ஆரம்பத்துல ஓட்டுப் போடாதவன் வாக்கு எல்லாம் கள்ளவோட்டா போடா ஆரம்பிச்சவன். பின்ன, எல்லாருடையே ஓட்டையும் கள்ளவோட்டா போட ஆரம்பிச்சான்.

ஒரு ஆய்வறிக்கை என்ன சொல்லுதுன்னா... நம்ம நாட்டுள்ள குறிப்பிட்ட ரெண்டு பெரிய கட்சிகளுக்கு இருக்க வாக்கு வங்கி கணக்குவிட, ஓட்டுப் போடாதவங்க சதவிதம் தான் அதிகமாம். பின்ன எப்படி மாற்றம் பிறக்கும் சொலுங்க..?

ஏதோ ஒரு வகையில.. நம்மள சுத்தி நடக்குற தவறுகள்ல நமக்கும் பங்கிருக்கு. நம்ம எல்லாரும் திருந்திட்டா.. இந்த சமூகம், நாடும் திருந்திடும். நூறு பேர் லஞ்சம் கொடுக்காம நேர்மையான முறையில வரிசையில நிக்கும் போது, சோம்பேறியா ஒருத்தன் லேட்டா வந்துட்டு.. முன்னாடி போய் சீக்கிரமா வேலைய முடிச்சுக்க முந்தியடிச்சுட்டு வரானே... அவன் அரசு அதிகாரியோ, ஊழல்வாதியோ இல்ல.. நம்மள்ல ஒருத்தன். அந்த ஒருத்தன் திருந்தனும்.

கேள்வி #4

வரப்போற ஆண்டு வருமான தாக்கல் செய்யும் போது... ஏமாற்றாம ஐ.டி டாக்ஸ் நாம ஃபைல் பண்ணிட்டா... அதுவே ஒரு பெரிய மாற்றம் தான். எவ்வளவுக்கு எவ்வளவு நாம அதிகமா சம்பாதிக்க ஆரம்பிக்கிறமோ... அதே அளவு.. ஏதோ ஒரு வகையில இதெல்லாம் தப்பா... எல்லாருமே பண்றாங்களேன்னு தப்பு செய்யவும் ஆரம்பிக்கிறோம்.

நெனச்சு பாருங்களேன்... இந்த அரசு சரியா, தவறான்னு பேசுறதுக்கு முன்னாடி... எத்தன பேர் இந்த மாநிலத்துக்கு, தேசத்துக்கு ஒழுக்கமான குடிமகனா நடந்திருக்கோம்? நம்ம எல்லாருக்குள்ளயும் ஒரு திருடன் இருக்குறான், ஒரு ஏமாத்துக்காரன் இருக்குறான்... அவன முதல்ல விரட்டி அடிக்கணும்...

கேள்வி #5

இன்னொன்னு... முறையா, தகுதியான அரசியல்வாதிய தேர்வு செய்யணும்னு கங்கணம் கட்டிட்டு பேசுற நாம... நம்ம ஆபீஸ்ல ஏதாவது ஓபனிங் வந்தா... உடனே.. நமக்கு தெரிஞ்ச வட்டாரத்துல இருக்க யாரையாவது தான் சிபாரிசு செய்வோம்... அவனைவிட தகுதியானவன் ஒருத்தன் வந்தாலும்... நமக்கு தெரிஞ்ச ஒருத்தனுக்கு வேலை கொடுக்க செய்வோம்...

தவறான/ தகுதி குறைந்த ஒருத்தர ஆபீஸ்ல தேர்வு பண்றதாலயும் சில பிரச்சனைகள், தாக்கங்கள் ஏற்படும்.. ஆனா, நாம ஏதாவது செஞ்சு... என்னோட செலக்ஷன் அப்படி இல்லன்னு பூசி முழிகிடுவோம். இதே தான் அரசியல்வாதிகளும் செய்றாங்க. தன்னோட கட்சி காரன் பண்ண தப்ப, தான் பண்ண தப்ப மூடி மறைக்க மத்தவங்க மேல சுமத்துறாங்க. கிட்டத்தட்ட பார்த்தா.. அப்ப அவங்களும், நாமளும் ஒன்னு தானே...?

எதுக்கு???!?!!

இதெல்லாம் இப்ப எதுக்குன்னு சிலர் கேட்கலாம்... இதெல்லாம் நாம நிறையவே அடிக்கடி ஆபீஸ்ல, வீட்டுல, ஃபிரெண்ட்ஸ் கூட சில சமயத்துல பேசி இருப்போம், ஏன் இந்த பேச்சுகளால சில நண்பர்கள் மத்தியில வாக்குவாதம் எல்லாம் கூட உருவாகி இருக்கும். என்ன தான் தினமும் நாம நல்லப்படியா வெளிய போயிட்டு வந்தாலும், அம்மா தினமும் வெளிய கிளம்பி போகும் போது.. பார்த்து போயிட்டு வாடான்னு சொல்றது இல்லையா... அப்படி தான், இதுநாள் வரைக்கும் நாம எத்தனையோ தடவ இதப்பத்தி எல்லாம் பேசி இருந்தாலும்... நம்மள்ல 80%க்கும் மேல இந்த தப்பு எல்லாம் பண்ணிக்கிட்டே தான் இருக்கோம். அதனால, இந்த வருஷமாவது நாம இதெல்லாம் தவிர்க்கலாம், குறைச்சுக்கலாமேன்னு.... ஒரு சின்ன நினைவூட்டல் அவ்வளவு தான்!

முயற்சி பண்ண காசு, பணம் தேவை இல்ல.. சும்மா பண்ணி தான் பார்ப்போமே..

No comments:

Post a Comment