Sunday, 21 July 2019

வாவ் அமலா பால்... இந்த ஒரு விஷயத்துக்காகவே நிச்சயம் பார்க்கணும்.. 'ஆடை' விமர்சனம்!

பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும், நடந்துகொள்ள வேண்டும் எனும் பிம்பத்தை கிழிக்கிறது அமலா பாலின் ஆடை.

தலைக்கனம் அதிகம் கொண்ட, திமிர் பிடித்த பெண் காமினி (அமலா பால்). சுதந்திர கொடி என பெற்றோர் வைத்தப் பெயரை, 'பெயரில் மட்டும் சுதந்திரம் இருந்து என்ன பயன்' என அந்த பெயரை மாற்றி தனக்கு தானே வைத்துக்கொண்ட பெயர் தான் காமினி. ஆண் நண்பர்களுடன் நடுராத்திரி ஊர் சுற்றுவது, பசங்களே பொறாமைப்படும் அளவுக்கு பைக் ஓட்டி அலுவலகத்துக்கு செல்வது, கஞ்சா, புகை, மது என சகல பழக்கமும் கொண்ட அல்ட்ரா மாடர்ன் பொண்ணு தான் காமினி.

காமினி வேலைப் பார்ப்பது ஒரு தொலைக்காட்சியில். ரம்யா, விவேக் பிரசன்னா, சரித்திரன் ஆகியோருடன் சேர்ந்து பிராங்க் ஷோ (கேன்டிட் கேமரா நிகழ்ச்சி) நடத்துவது தான் காமினியின் வேலை. இவர்களுடைய அலுவலகத்தை ஒரு புதிய கட்டடத்திற்கு மாற்ற ஏற்பாடு நடக்கிறது. அந்த கட்டடத்தில் இரவு பார்ட்டி கொண்டாட முடிவு செய்கிறார்கள் காமினியும் நண்பர்களும். பார்ட்டி முடிந்து கண் விழிக்கும் காமினி, ஆடையில்லாமல்... நிர்வாணக் கோலத்தில் அந்த கட்டடத்தில் கிடக்கிறார். இந்த கோலத்தில் அவர் கிடக்க என்ன காரணம் என்பதை தேடி பயணிக்கிறது மீதிக்கதை.

ஒரு புதிய கதைகருவை தேர்ந்தெடுத்த இயக்குனர் ரத்னகுமாருக்கு பாராட்டுகள். காமினியின் கதாபாத்திரத்தை மிக ஆழமாக யோசித்து உருவாக்கி இருக்கிறார். டபுள் மீனிங் காமெடி, ஜாலி பைக் ரைட், அமலா பால் கேரக்டரின் குணாதிசியங்கள் என முதல் பாதி படம் சூப்பர். இடைவேளை காட்சி உண்மையிலேயே மிரட்டல்.

இரட்டை அர்த்த அடல்ட் காமெடிகள் நிச்சயம் சிரிப்பை வரவைக்கின்றன. அந்தாக்ஷரி விளையாடும் போது இந்த பாடலுக்கு ராயல்டி தருனுமா என கேட்கும் இடம் செம ரகளை. ஆனால் இதையெல்லாம் தாண்டி, பார்வையாளர்களுக்கு நிறைய கேள்விகளை எழுப்புகிறார் இயக்குனர். அது தான் இந்த படத்தின் வெற்றி. க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் செம.

ஒரு பெண் நிர்வாணமாக ஒரு இடத்தில் சிக்கி இருக்கும் போது இந்த சமூகம் அவளை எப்படி பார்க்கிறது?, ஒரு பெண் எப்படி ஒரு காட்சிப் பொருளாக, செக்ஸ் மெட்டிரியலாக இந்த சமூகத்தால் பார்க்கப்படுகிறாள் எனும் கேள்விகள் தான் படம் முடிந் து வெளியே வந்த பின்னரும் நம் மனதுக்குள் ஓடுகிறது. எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணை ஆடையில்லாமல் நிர்வாணமாக தானே பார்க்க விரும்புறான் என அழுத்தமாக கூறுகிறார் இயக்குனர்.

இத்தனை நல்ல கருத்துகள் படத்தில் இருந்தாலும், திரைக்கதை மற்றும் கதையில் சில நெருடல்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அதை எல்லாம் மறக்கடித்துவிடுகிறார் அமலா பால். அவரது திரை வாழ்க்கையில் நிச்சயம் ஒரு முக்கியமான படம் ஆடை. முழு படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். அமலாவுக்காகவே படத்தை பார்க்க வேண்டும். இந்த காமினி இன்றைய சமூகத்துக்கு ஒரு பாடம்.

போல்டான பெண்ணாக இருந்தாலும், சதா ஆண் நண்பர்களுடனே சுற்றித்திரிந்தாலும் ஆடையில்லாமல் நிர்வாணமாக்கப்படும் போது, அமலா முதலில் தேடுவது ஒரு பெண்ணின் உதவியை தான். அப்போது அவருக்குள் ஏற்படும் கற்பனை தான் இந்த படத்தின் செய்தி. இந்த காட்சிகளில் எல்லாம் தோனியை போல் ஹெலிக்காப்டர் ஷாட்டாக பறக்கிறது அமலாவின் நடிப்பு பால். ஹேட்ஸ் ஆப் அமலா.

அமலா பாலின் நண்பர்களாக வரும் விவேக் பிரசன்னா, சரித்திரன், ரம்யா என அனைவருமே சூப்பர் நடிப்பு. பிஜிலி ரமேஷின் கேரக்டர் தான் கொஞ்சம் சலிப்பு. ஊர்கா பேண்ட்டின் இசை செம மாஸ். பாப் ஸ்டைலில் ஒலிக்கும் பாடல்கள் ராக்கர்ஸ்க்கு நிச்சயம் பிடிக்கும். ஆனால் பின்னணி இசை காட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் ஒலிக்கிறது.

ஒவ்வொரு பிரேமையும் மிக கனவமாக வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். அதை மிக கவனமாக கையாண்டிருக்கிறார் எடிட்டர் சபீக் முகமது அலி. அதனால் படத்தில் ஆபாசமோ, விரசமோ இல்லை. நெருடல் இல்லாமல் படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்.

வெறிப்பிடித்த நாய்கள், காமக்கொடூர ஆண் என படத்தில் நிறைய குறியீடுகளை வைத்து கதையை பின்னியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அவை எத்தனை பார்வையாளர்களுக்கு புரியும் என்பதை இயக்குனர் சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். இரண்டாம் பாதியில் படம் தட்டுதடுமாறுகிறது. ஓழுங்கற்ற திரைக்கதை அமைப்பு நம்மை குழப்புகிறது. சொல்ல வந்த விஷயத்தை இன்னும் ஜனரஞ்சகமாக சொல்லி இருக்கலாம்.

அமலா பாலின் நடிப்புக்காக, உழைப்புக்காக, அர்ப்பணிப்புக்காக இந்த 'ஆடை'யை அணியலாம்.

No comments:

Post a Comment