Saturday 20 July 2019

செம ட்விஸ்ட்! நான் கிரிக்கெட் ஆட வரலை.. ராணுவத்துக்கு போறேன்.. எல்லோருக்கும் ஷாக் கொடுத்த தோனி!

தோனி அடுத்த இரண்டு மாதத்திற்கு இந்திய இராணுவத்தின் பாராமிலிட்டரி பிரிவுடன் நேரம் செலவிட உள்ளதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தோனி ஓய்வு குறித்தும், அடுத்து நடக்க உள்ள கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் தோனி இடம் பெறுவாரா? என்பது குறித்தும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்ற நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்த தகவல்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் விளையாட உள்ளது. உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியுடன் வெளியேறிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இளம் வீரர்களை அடையாளம் காண்பதுடன் தொடர் வெற்றிகளை குவித்து தோல்வியில் இருந்து மீள முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி குறித்த குழப்பம்

மூத்த வீரர் தோனி 38 வயதாகும் நிலையில், உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என பரவலாக பேசப்பட்டது. எனினும், தோனி எந்த ஓய்வு அறிவிப்பையும் வெளியிடவில்லை, கேப்டன் கோலியிடம் கூட அது பற்றி பேசவில்லை. இதனால், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தோனியை தேர்வு செய்வதா? அல்லது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதா? என்ற குழப்பம் நீடித்து வந்தது.

தோனி அதிரடி முடிவு

இந்த நிலையில், தோனி அடுத்த இரண்டு மாதங்களுக்கு இராணுவத்தின் பாராமிலிட்டரி பிரிவுடன் செலவிட இருப்பதாக பிசிசிஐயிடம் கூறி இருக்கிறார். இதை பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இராணுவம் ஏன்?

பாராமிலிட்டரியின் பாராஷூட் பிரிவில் லெப்டினன்ட் கலோனலாக இருக்கிறார் தோனி. அதனால் அவர் அங்கே நேரம் செலவிட திட்டமிட்டுள்ளார். உலகக்கோப்பை தொடரின் போது கூட இராணுவ முத்திரை அணிந்த விக்கெட் கீப்பிங் கிளவுஸ் அணிந்து ஆடியது சர்ச்சை ஆனது.

விலகுகிறாரா தோனி?

தோனி என்ன காரணம் கூறினாலும் அவர் அணியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. தோனி அடுத்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என சிலர் கூறி வருகிறார்கள். அதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடுவதை தோனி தவிர்க்க திட்டமிட்டு இருக்கலாம் என்ற கோணமும் இதில் உள்ளது.

பிசிசிஐ நிம்மதி

எது எப்படியோ, பிசிசிஐ தோனியின் இந்த முடிவால் திருப்தி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணித் தேர்வு சுமூகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பந்த் அணியின் முதல் விக்கெட் கீப்பராக இனி செயல்படுவார். அவருக்கான பாதையும் தயாராகி உள்ளது.

No comments:

Post a Comment