Saturday 29 June 2019

8 தோட்டாக்களை மிஞ்சிய ஜீவி... புரியாத விஷயத்தை புரியும்படி சொல்கிறது! விமர்சனம்

வலுவான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை, திறமையான நடிகர்கள் என ஒரு அருமையான படமாக வந்துள்ளது ஜீவி.

தொடர்பியல் முக்கோண அறிவியலின் அடிப்படையில் இருவேறு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் ஒரே மாதிரியான சம்பவங்கள், ஒரு மையப்புள்ளியில் நிற்பது தான் ஜீவி படத்தின் ஒன்லைன்.

இதை படிக்கும் போது, ஏதோ இயற்பியல் பாடத்தில் வரும் ஒரு விதியை போல் தெரிகிறதா. எதுவுமே புரியவில்லை அல்லவா. ஆனால் இந்த புரியாத சயின்ஸ் பாடத்தை, மிகத் தெளிவாக, ஜனரஞ்சகமாக விளக்குகிறது ஜீவி திரைப்படம்.

சொந்த ஊரில் கெத்தாக திரிந்து கொண்டிருந்த வெற்றியின் வாழ்வை அப்படியே புரட்டிப் போடுகிறது சென்னை. மற்றவர்களை அடித்தே பழகிய வெற்றியின் கைகள், சென்னையில் ஷேர் ஆட்டோக்காரரின் வாய்க்கு அடிப்பணிகிறது.

எட்டாவது கூட தாண்டாத வெற்றி ஒரு புத்தகப்புழு. சதா லைப்ரரியிலேயே கிடந்து பல விஷயங்களை படித்து தெரிந்து கொள்ளும் அதீத ஆர்வம் கொண்டவர். ஏதாவது ஒரு புது விஷயத்தைப் பற்றி படித்தாலோ, பார்த்தாலோ, கேள்விப்பட்டாலோ, அதனை உடனடியாக செய்து பார்க்கும் அளவுக்கு ஆர்வம் படைத்தவர்.

சென்னையில் பல வேலைகள் பார்த்து, எதுவுமே செட்டாகாமல் கடைசியில் ஒரு கடையில் ஜூஸ் போடும் வேலையில் ஒட்டிக்கொள்கிறார். அதற்கு காரணம் அதே கடையில் டீ மாஸ்டராக வேலை பார்க்கும் நண்பர் கருணாகரனும், எதிர்த்தக்கடையில் வேலை பார்க்கும் மோனிகாவும் தான்.

வெற்றியும் மோனிகாவும் காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் வெற்றியின் பொருளாதார நிலையை காரணம் காட்டி மோனிகா விட்டுசெல்கிறார். அப்போது தான் வெற்றிக்கு வாழ்க்கையின் மீது விரக்தி ஏற்படுகிறது. ஊருக்கு திரும்பலாம் என்றால், அம்மா, அப்பா, அக்கா என குடும்பச் சூழல் தடுக்கிறது.

இந்த நிலையில் தான் வெற்றியும், கருணாகரனும் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ரோகினி, தனது கண்பார்வையற்ற மகள் திருமணத்திற்கு நகை வாங்கி பீரோவில் கைக்கிறார். அந்த பீரோ சாவி, வெற்றியின் கைக்கு எதர்ச்சையாக கிடைக்கிறது. அதை வைத்து அந்த நகைகளை திருடுகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ஜீவியின் சுவாரஸ்யமான கதை.

வலுவான கதையை எழுதி, அதற்கு மிக சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் பாபுதமிழ். அதனை குழப்பமில்லாமல், தெளிவாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கோபிநாத். இருவருக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்.

தன் வினை தன்னைச் சுடும், வினை விதைத்தவன் வினையருப்பான் என தமிழில் நிறைய சொலவடைகள் உண்டு. கர்மா இஸ் பூமராங் என்பதை போல், ஒருவர் செய்யும் தவறு, அவரது குடும்பத்தை எப்படி பாதிக்கும் என்பதை புத்திசாலித்தனமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.

8 தோட்டாக்கள் படத்தில் அப்பாவி போலீசாக, அதிகம் பேசாமல் நடித்த வெற்றிக்கு இந்த படத்தில் அப்படியே உல்டாவான வேடம். முந்தைய படத்தை போலவே சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் புத்திசாலித்தனமாக அவர் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்மை ஈர்க்கிறது.

வெகுநாட்கள் கழித்து மீண்டும் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறார் கருணாகரன். அதிகம் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக நடித்து ஸ்கோர் செய்கிறார். ஒரு சில இடங்களில் அவரது கவுண்டர் டயலாக்குகள் குபீர் சிரிப்பை வரவைக்கிறது.

'நான் என்ன அழகுன்னு நினைக்கல... நீ தான் அப்டி நினைக்கிற' என அழகாய் பேசி பக்கத்து வீட்டு பெண் போல பாந்தமாக வலம் வருகிறார் மோனிகா சின்னகோட்லா. நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் இல்லை என்றாலும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.

வீட்டு உரிமையாளராக வரும் ரோகினி, படத்தின் திருப்புமுனையாக வரும் மைம் கோபி உள்பட நடிகர்கள் அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் 'விடைகளே கேள்விகளாய்' பாடல் மனதை ஏதோ செய்கிறது. 'அஞ்சாரி' கேட்க ரம்மியம் தான். அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல், சரியான மீட்டரில் இருக்கிறது பின்னணி இசை.

குழப்பமான கதையம்சம் உள்ள ஒரு படத்தை மிக தெளிவாக புரியவைத்திருக்கிறார் எடிட்டர் பிரவீன் கே.எல். சரியாக காட்சிகளை சரியான இடத்தில் வைத்ததாலேயே திரையில் இருந்து கண் அகலாமல் படத்தை பார்க்க முடிகிறது. நேரடியாக நிகழவும் சம்பவங்களை பார்க்கும் உணர்வை தருகிறது பிரவீன் குமாரின் ஒளிப்பதிவு.

படம் பார்க்கும் போது நமக்குள் எழும் கேள்விகளுக்கு அடுத்தடுத்த காட்சிகளில் விடை தருகிறார் இயக்குனர். குறிப்பாக அந்த 'ரெய்டு காட்சி' மைண்ட் வாய்ஸ் வெளியில கேட்ட மொமண்ட். லாஜிக் பிழை வந்துவிடக் கூடாது என்பதில் பாபுதமிழும், கோபிநாத்தும் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

அப்படி இருந்தும் கூட ஒரு சில இடங்களில் லாஜிக் பிரச்சினை வர தான் செய்கிறது. 'பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைங்க தலையில' எனும் சிம்பிளான ஒன்லைன் தான் படத்தின் கரு. ஆனால் அதை தலையை சுற்றி மூக்கை தொடுவது போல, தொடர்பியல், முக்கோணம் என ரீல் சுற்றி படத்தை எடுத்திருக்கிறார்கள். அதேபோல், போலீசை ஏமாற்றி எப்படி திருடுவது என கற்றுக்கொடுப்பது போல் உள்ளது காட்சிகள்.

இருந்தாலும் இது ஒரு புதிய முயற்சி என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. கதையை மட்டுமே நம்பி களமிறங்கி இருக்கும் ஜீவியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்போம்.

No comments:

Post a Comment