Saturday 29 June 2019

ஒரு கிலோ இட்லி மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணி இலவசம் .. பலே சென்னை ஆஃபர்

ஒரு கிலோ இட்லி மாவு வாங்கினால், ஒரு குடம் தண்ணி இலவசம் என்று ஒருவர் அறிவித்துள்ளார்.

வாயை திறந்து சொல்ல முடியாத அளவுக்கு சென்னையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சத்துக்கு காரணம் திமுக, அதிமுக என இரு கட்சிகளுமே ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதில், திமுக உட்பட பிரதான கட்சிகள் பொதுமக்களுக்கு சொந்த முயற்சி எடுத்து குடிநீர் வழங்கி வருகிறார்கள். அதேபோல, மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க, ஜோலார்பேட்டையிலிருந்து ரயில்களில் தண்ணீர் கொண்டுவர அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், ஒருவர் தண்ணீர் இலவசம் என்று விளம்பரம் செய்துள்ளார். சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் இட்லி மாவு கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடை ஓனர், "ஒரு கிலோ இட்லி அல்லது தோசை மாவு வாங்கினால் ஒரு குடம் நிலத்தடி நீர் இலவசம்" என்று விளம்பரம் தந்துள்ளார். அந்த விளம்பரத்துக்கு கீழே "மாவு வாங்க வரும்போது குடம் கொண்டு வரவும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லை.. "குறிப்பு.. குடிநீரை வடிகட்டி காய்ச்சிய பிறகு உபயோகப்படுத்தவும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சத்தை, தன்னுடைய மாவு கடை பிசினஸ்-க்கு ஓனர் நன்றாகவே பயன்படுத்தி உள்ளதால், இந்த விளம்பரம் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment